நீங்க மசாலா டீ மட்டும் தான் இதுவரை குடிச்சிருக்கீங்களா? உலகம் முழுதும் வித்தியாசமான தேநீர் வகைகள் பற்றி இங்கே தெரிஞ்சிக்கலாம் வாங்க.

குளிருக்கு இதமாக ஒரு கப் தேநீரை உறிஞ்சும் சுகம் அலாதியானது. குறிப்பாக ஆசிய மக்களுக்கு தேநீர் இன்றி பொழுது போகாது. உடலுக்கு புத்துணர்வு அளிக்கும் தேநீரை, தயாரிப்பதே ஒருவித கலை தான்!

சரி, தைவானின் ‘பப்புள் தேநீர்’ முதல் வங்கதேசத்தின் ’7 அடுக்கு தேநீர்’ என நம் அண்டை நாடுகளின் வித்தியாச தேநீர் வகைகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.

டாக்கா

சமீப நாட்களில் தேநீர் தயாரிக்க பல ’ஆப்ஷன்கள்’ இருக்கின்றன. ஆனால் டாக்காவில் சற்று வித்தியாசமாக ‘7 அடுக்கு தேநீர்’ தயாரிக்கப்படுகிறது. இதற்கு ‘ரங்தோனு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ரங்தோனு என்றால் வானவில் என்று பொருள். இந்திய மதிப்பில் இதனை சுவைக்க ரூ.59 செலவாகும். அதோடு இங்கு ‘3 அடுக்கு மற்றும் 5 அடுக்கு’ தேநீரும் கிடைக்கிறது.

மலேசியா

மலேசியாவில் ‘டெ டெரிக்’ எனும் தேநீர் மிகவும் பிரபலமானது. டெ டெரிக் என்றால் இழுத்தல் என்று பொருள். அதாவது தேநீர் தயாரிப்பின் போது மேலும் கீழுமாக இழுத்து ஆற்றுவோமே, அதனை அடிப்படையாக வைத்து இப்படியொரு சுவாரஸ்ய பெயரிட்டிருக்கிறார்கள் மலேசியர்கள். ’மலேசியன் – சிலோன் மில்க்கைப்’ பயன்படுத்தி தயாரிக்கும் இந்தத் தேநீரின் தன்மையும், மனமும் வேற லெவலில் இருக்கும்.

ஜப்பான்

ஜப்பானில் தேநீர் தயாரிப்பதும், பரிமாறுதலும் அத்தனை நல்ல பழக்கமாகப் பார்க்கப்படுகிறது. தேநீர் விழாவை தங்களது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே கடைப்பிடித்து வருகிறார்கள் இந்நாட்டு மக்கள். இவர்கள் ஒவ்வொரு நிகழ்விற்கும் வெவ்வேறு விதமான தேநீர் அருந்தும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பொடியான பசுந்தேயிலை (கிரீன் டீ) தேநீர் தான் ஜப்பானியர்களின் மோஸ்ட் ஃபேவரிட். தேயிலையின் கசப்பு தெரியாமல் இருக்க, கொஞ்சம் இனிப்பையும் இவர்கள் சேர்த்துக் கொள்கிறார்கள்.

தைவான்

தைவானின் பிரபல கண்டுப்பிடிப்பு ‘பப்புள் டீ’. இது அதிக கலோரிகளைக் கொண்ட தேநீர் ரகம். ப்ளாக், கிரீன், ஜாஸ்மின் வகை ஐஸ் தேநீர் வகைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு, அதோடு பால் பவுடர் மற்றும் இனிப்பு சேர்க்கப்படும். பப்பிள் டீ என பெயரிட்டு விட்டு, அது இல்லாமலா? இறுதியாக இந்தத் தேநீரில் சிறு ஸ்டார்ச் உருண்டைகள் இறுதியாக சேர்க்கப்படும்.

சீனா

சீன மக்கள் தேயிலையை நொதிக்கச் செய்து, பிறகு அதனை ஆக்ஸிஜனேற்றம் செய்து இறுதியாக காயவைத்து, டீ தூளாகப் பயன்படுத்துகிறார்கள்.

திபெத்

திபெத்தில் கிடைக்கும் பட்டர் டீ மிகவும் பிரபலம். வெண்ணெயில் இருக்கும் உப்புச்சுவையுடன் இதனை ரசித்து ருசித்து அருந்துகிறார்கள் திபெத்திய மக்கள். தேயிலையை கொதிக்கும் நீரில் சில மணிநேரம் ஊற வைத்து, பிறகு வெண்ணெய் சேர்த்து குடிப்பது இவர்களின் வழக்கம்.

நம் அண்டை நாட்டவரின் தேநீர் பழக்கங்களை அறிந்துக் கொண்டோம்.